அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/27/13

மக்கள் ஆடை பெற்று மானம் காத்திட வழி செய்தார்
க்களின் இன்றியமையாத தேவைகள் மூன்று. அவை உணவு, உடை, இருப்பிடம் என்பன. இந்த மூன்றிலும் முக்கியமானது எது? சிந்திக்க வேண்டிய கேள்வி இது. நம்நாட்டு மக்களில் பலர், பல சந்தர்ப்பங்களில் ஒரு வேளை உணவுகூட இல்லாமல் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை யாரும் பழிப்பது இல்லை. தெருவோரத்தில் குடியிருந்து காலம் கழிப்பவர் பலர். சொந்த வீடு இல்லாததற்காக இவர்களை யாரும் குறை சொல்லுவது இல்லை.

உணவும் இருப்பிடமும்கூட இல்லாமல் ஒருவன் இருந்து விடலாம். ஆனால் ஆடையில்லாமல் ஒருவன் இருக்கலாமா? கூடாது. ஆடையில்லாமல் திரிபவனைப் பைத்தியம் என்றல்லவா கேலி செய்வார்கள்?

மானத்தைக் காப்பது மட்டுமல்ல; மனிதனுக்கு மரியாதையைத் தேடிக் கொடுப்பதும் ஆடைதான். "ஆள் பாதி ஆடை பாதி' என்னும் பழமொழி இதனை வற்புறுத்தும்.

நல்ல ஆடைகளை அணிந்திருப்பவர்களுக்கு வரவேற்பும், அத்தகைய ஆடைகளை அணியாதவர்களுக்கு அவமரியாதையும் ஏற்படுவதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். கடவுளரில்கூட, திருமால் பட்டாடை அணிந்திருந்ததால்தான் பாற்கடல் அவருக்குத் திருமகளைக் கொடுத்ததாம்; சிவபெருமான் புலித்தோலை உடுத்தியிருந்ததால் அதே பாற்கடல் அவருக்கு ஆலகால விஷத்தைக் கொடுத்ததாம்.

"மேலாடை யின்றிச் சபை புகுந்தால் இந்த மேதினியோர்

நூலாயிரம் படித்தாலும் எண்ணார் நுவல் பாற்கடலோ

மாலானவன் அணி பொன்னாடை கண்டு மகளைத் தந்தே

ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன்தனக்கே.'

ஆடையின் பெருமையை இந்த அழகிய பாடலால் உணர்த்தியிருக்கிறார் நையாண்டிப் புலவர். கடவுளர்க்கே இந்த நிலை என்றால், நல்ல ஆடைகள் இல்லாவிட்டால் மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் ஏது?

மானத்தைக் காத்து நம் மதிப்பை உயர்த்தும் ஆடை பிறந்த கதையை தேவாங்க புராணம் கூறுகிறது. பதினெண் புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தின் உத்தர காண்டத்தில் தேவாங்க புராணம் என்னும் பகுதி காணப்படுகிறது. முதன்முதலில் வடமொழியில் எழுதப்பட்ட தேவாங்க புராணம், பிற்காலத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ் முதலிய பல மொழிகளில் எழுதப்பட்டது. மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என்னும் புலவர் இதனைத் தமிழில் செய்யுள் வடிவில் ஆக்கியுள்ளார்.

நம் நாட்டில் வாழும் பல இனத்தவர்களில் தேவாங்கர் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவர். "ஆதியில் நெசவுத் தொழிலைச் செய்து அனைவருக்கும் ஆடைகளை வழங்கியவர்கள் இவர்களே' என்று தேவாங்க புராணம் கூறுகிறது. தமிழ் நாட்டிலும், தென்னிந்தியாவின் வேறு பல மாநிலங்களிலும் தேவாங்கர்கள் இன்றும் நெசவுத் தொழிலைச் செய்து வருவதை நாம் காணலாம்.

தேவாங்கர்களின் முதல் மகன் தேவல முனிவர் என்று புராணம் கூறுகிறது. ஆடையில்லாமல் மக்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு ஆடைகளை நெய்து தருவதற்காக சிவபெருமான் இவரைத் தம் இதயக் கமலத்தினின்று தோற்றுவித்தார் என்று அதில் சொல்லப்பட்டுள்ளது.

தம்மைப் படைத்த இறைவனை நோக்கி, ""நான் யாது செய்ய வேண்டும்?'' என்று தேவல முனிவர் பணிவுடன் வினவினார். அப்போது சிவபெருமான், ""ஆடைகளை நெய்து கொடுத்து அனைவருடைய மானத்தையும் காப்பதற்காக உம்மைப் படைத்தோம். நீ இப்போது திருப்பாற்கடலுக்குச் சென்று, அங்கு ஆதிசேடன்மீது அறிதுயில் கொள்ளும் திருமாலைக் காண்பாயாக. அவரிடம் நீ செய்யப்போகும் கடமையைத் தெரிவித்து, அவரது உந்தித் தாமரை நூலை பெற்றுப் பலவித ஆடைகளை நெய்வாயாக. அவற்றைப் பலருக்கும் கொடுத்து உதவி செய்வாயாக!'' என்று சொல்லி அனுப்பினார்.

உமா மகேஸ்வரரின் அருள் பெற்ற தேவல முனிவர் திருப்பாற்கடலை நோக்கிப் பயணம் செய்தார். பாற்கடலுக்கு அருகிலிருந்த கருடாசிரமத்தில் தங்கினார். வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து, அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற கண்ணனை நினைத்துப் பல நாட்கள் தவம் செய்தார். "மாலே! நெடியோனே! விண்ணவர்க்கு மேலானவனே! ஞாலம் அளந்தவனே! ஆல்மேல் வளர்ந்தவனே! அரவணைப் பரமனே! விரைந்து அருள் செய்ய வேண்டும்' எனப் பலவாறு துதித்துத் தவமியற்றினார்.

அன்பரின் அன்புக்கு எளியவனாகும் திருமால் தேவல முனிவரின் உறுதி மிக்க நெடுந்தவத்திற்கு மகிழ்ந்தார். அவருக்குக் காட்சியளித்து, ""புனிதனே! உனது தவத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்தோம். ஆதலால் உனக்கு விருப்பமான வரத்தைக் கேள், தருகிறோம்'' என்றார். சிவபெருமான் இட்ட கட்டளையைத் தேவல முனிவர் திருமாலிடம் தெரிவித்தார். மக்களின் மானத்தைக் காக்க ஆடைகள் நெய்ய இருப்பதாகவும், அதற்கு அவருடைய உந்தித் தாமரை நூல் வேண்டும் என்றும் கேட்டார்.

அதனைக் கேட்ட திருமால், உலகம் தொடங்கிய காலம் முதற்கொண்டு தாம் தமது உந்தித் தாமரை நூலைக் காப்பாற்றி வந்துள்ளதாகவும்; அது பயனடையும் காலம் வந்துவிட்டதென்றும்; அந்த நூலைக் கொண்டு ஆடைகள் நெய்து தேவர், மக்கள் முதலிய அனைவருக்கும் உதவி செய்க என்றும் கூறி நூலைக் கொடுத்தார்.

"என, மகிழ் சிறந்து மால்தன் இலஞ்சியங் கமலத் துற்ற

பனுவல்தந் திதனால் நீயப் பண்ணவர் ஏனோர் யார்க்கும்

புனைபல அம்பரங்கள் புரிந்து நாண் புரத்தி என்றே

கனிவுறு கருணை செய்து கலுழனூர்ந் தினிது சென்றான்.'

(மாம்பழக் கவி)

திருமால் அளித்த நூலைத் தேவல முனிவர் பெற்றுச் சென்று ஆடைகள் நெய்து மக்களுக்கும் தேவர்களுக்கும் வழங்கினார்.

தேவல முனிவர் நெய்து கொடுத்த ஆடைகள் தேவர்களின் அங்கங்களை அலங்கரித்ததால் அவருக்குத் தேவாங்கன் என்னும் பெயர் ஏற்பட்டது என்றும்; அவர் வழி வந்தவர்கள் தேவாங்கர் என்னும் இனத்தார் என்றும் தேவாங்க புராணம் கூறுகிறது.

இவ்வாறு, காக்கும் கடவுளாகிய திருமால் தம் நாபிக் கமல நூலைத் தேவல முனிவருக்கு வழங்கி, மக்கள் ஆடை பெற்று மானம் காத்திட வழி செய்தார் என அறிகிறோம். 

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1053