அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/22/13

கோவை கத்தோலிக்க தேவாங்கர் சங்க வரலாறு

முதல்பாகம் (காலம் 1964 முதல் 1984 முடிய)  
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் தேவாங்கர் குலமக்கள் கிறிஸ்தவர்களாக சத்திய மறையில் சேர்ந்தார்கள் என்பது RED SAND (ரெட்சேன்ட்) என்னும் பத்திரிக்கை மூலம் நாம் அறிகிறோம். நமது முன்னோர்கள் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னையை நமது குலத்திற்கு பாதுகாவலியாக கொண்டு அதை சுற்றியுள்ள ஊர்களில் குடும்பத்துடன் தங்கி நெசவு தொழில் செய்து வந்தார்கள். நெசவு தொழில் நல்லமுறையில் நடைபெற்றுக் கொண்டு வந்தபொழுது ஏற்பட்ட இரண்டாம் உலகபோரால் நெசவு தொழிலுக்கு போதிய உபகரணங்கள் கிடைக்கப்பெறாததால் நெசவு தொழில் வீழ்ச்சி அடைந்தது. நெசவு தொழில் வீழ்ச்சி அடைந்துவிட்ட காரணத்தால் நமது முன்னோர்கள் கோவை மாவட்டத்தை விட்டு 1926-ம் ஆண்டு கல்கத்தா, பினாங்கு, ரங்கூன் ஆகிய ஊர்களுக்கு சென்று பிழைக்க வழி தேடினர். மேலும் சிலர் இங்கேயே தங்கி தொழில் நடத்தி வந்தார்கள். அவர்களில் பலர் 1946-ம் ஆண்டு பம்பாய் மாநகருக்கு சென்று அங்குள்ள நூல் மில்களில் சேர்ந்து தங்களது தொழிலை செய்து வந்தார்கள். பம்பாய் மாநகரில் நமது குல மக்கள் அதிகபட்சமாக சுமார் 200 குடும்பங்கள் அங்கு குடியேறியதால் அங்குள்ள நமது முன்னோர்கள் 1956-ம் ஆண்டு தென்னிந்திய கத்தோலிக்க தேவாங்க சங்கம் என்னும் ஓர் அமைப்பை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தார்கள். அவர்கள் அங்கு வாழும் நமது முன்னோர்களின் வாழ்க்கை தரம், படிப்பு மற்றும் தொழில் ஆகியவற்றில் நன்கு வளர பல வழிகளில் உதவி செய்து வந்தார்கள். தற்பொழுதும் அதுபோல் உதவிகள் அச்சங்கம் செய்து வருகிறது. 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சங்கத்தின் பொன் விழாவினை 2009-ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடினார்கள்.
கோவை மாவட்டத்தில் வாழும் நமது முன்னோர்கள் நமது குலமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும் என்று எண்ணி பெரிதும் பாடுபட்டார்கள். ஆனால் மற்ற இனத்தவர்களைப் போல் நமது மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு அடையாததை கண்டு பெரிதும் மனம் வருந்தி அதற்கு ஒரு வழி தேடினார்கள். மற்ற இனத்தவர்கள் படிப்பிலும், தொழிலிலும் முன்னேறி உயர்வான வாழ்க்கையை அமைத்து கொண்ட சமயத்தில் நமது முன்னோர்களின் கவனம் நமது மக்களின் மேல் விழ நமது குழந்தைகளை படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்து பின்தங்கியுள்ள நமது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் அரசாங்கத்திடமிருந்து நமது மக்களுக்கு சலுகைகள் பெற்றுத் தரவும், நமது சமுதாயம் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி திரு. ஆர்.எம். செட்டியார் (சுங்கம்) அவர்களும்

திரு. ஆர்.எம். செட்டியார்

திரு.மரியசூசை செட்டியார்
திரு.மரியசூசை செட்டியார் (புலியகுளம்) அவர்களும் நமக்காக ஒரு சங்கம் அமைக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டனர். இவர்களுடைய முயற்சியால்தான் கத்தோலிக்க தேவாங்கர் சங்கம் 1964-ம் ஆண்டு ஜுலை மாதம் 12-ம் நாள் கோவை கர்னாட்டிக் தியேட்டரில் திருவாளர் பழனி எம்.ஏ. பொன்னுசாமி செட்டியார் (பழனி) அவர்கள் தலைமையில் (அனைத்து ஊர்களிலுள்ள நமது மக்களின் நலனுக்காக) வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இந்த சங்கத்திற்கு முதல் தலைவராக திரு. மரியசூசை செட்டியார் (புலியகுளம்) அவர்களும், உதவி தலைவர்களாக திரு. எம்.ஏ. தானியேல் செட்டியார், சோமனூர், எஸ். மைக்கேல் செட்டியார், சவுரிபாளையம், திரு. எஸ். குழந்தைசாமி செட்டியார், திருப்பூர், செயலாளராக திரு. ஐ. பாபு சோமனூர், உதவி செயலாளராக திரு. எஸ்.ஏ. மைக்கேல் சாமி செட்டியார், சவுரிபாளையம், பொருளாளராக திரு. சிலுவை சந்தியாகு, சிங்கநல்லூர் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுடன் ஆலோசர்களாக திரு. ஆர்.எம். செட்டியார் (சுங்கம்) அவர்களும், திரு. சவுரிமுத்து செட்டியார் (ரிடையர்டு டி.எஸ்.பி சவுரிபாளையம்) அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். நமது குலத்திற்காக அரும்பாடுபட்டு ஒர் அமைப்பினை ஏற்படுத்தி நமது குல மக்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றிய நமது முன்னோர்களுக்கு நாம் என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த சங்கம் இன்று பொன்விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லும் போது பெருமிதம் கொண்டுள்ளோம்.

1964-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னையை பாதுகாவலியாக கொண்டு சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டு வந்தது. ஜெபமாலை அன்னையின் கோயிலை கட்ட நமது குல மக்கள் பெரிதும் உதவி செய்திருக்கிறார்கள். கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னையின் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த 10 ஊர்களிலுள்ள நமது குலமக்களிடமிருந்து வரி வசூல் செய்து சிறப்பாக நடத்தி வந்தார்கள். கோவில் வரி வசூல் செய்யும் பொறுப்பினை வேட்டுவ பாளையம் மரியசூசை செட்டியார் ( புள்ளிகாரர் குடும்பம் ) அவரது மகன் துரைசாமி செட்டியார் அவர்கள் ஏற்று திருவிழாவிற்கு முன் அனைத்து ஊர்களுக்கும் சென்று வரி வசூல் செய்து மாதாவின் திருவிழாவை நடத்தி வந்தார்கள். வரி வசூல் செய்ய அனைத்து ஊர்களுக்கும் செல்லும் போது அங்குள்ள ஊர் செட்டியார் என்பவர் இவர்களுடன் சேர்ந்து அங்கு வாழும் மக்களிடம் வரி வசூல் செய்து கொடுக்க உதவி செய்தார்கள். அப்போது நமது குல மக்கள் அனைவரும் வரி தொகையினை தவறாது அன்னையின் கோயிலுக்கு அளித்து வந்ததுடன் ஆண்டுதோறும் திருவிழாவிற்கு அனைத்து ஊர்களிலிருந்து புகைவண்டி மூலமும், மாட்டு வண்டி மூலமும் திருவிழாவிற்கு வந்து ஒரு வாரம் வரையிலும் தங்கி செல்வார்கள். மாதாவின் கோயிலுக்கு வந்து செல்வதை நமது மக்கள் ஒரு பாடலாக இயற்றி உள்ளார்கள். அந்த பாடல் தற்பொழுதும் நமது திருமணங்களில் பாடப்பட்டு வருகிறது.
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம், ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம், ஆனந்தம் ஆரோக்கிய மாதாவின்
பாதாரமே பரமானந்தமே!
போத்தனூர் இரயில் ஏறிவந்தோம், புது
சிங்கநல்லூர் ஸ்டேசன் தாண்டி வந்தோம்
சூலூர் சோமனூர் மீண்டும் வந்தோம்
ஜெபமாலை மாதா கோவில் அண்டிவந்தோம்.
கோபுர மேலுயர்வாக தெரியுது
கொடி பறக்குது தேர் வருது
சாவடி சத்திரம், மக்கள் தங்குவது
சித்திர வேலைகள் ஜோராகுது
ஆலயத்தில் சிற்ப வேலைகளும்
அதற்கந்தபுரம் பல சாலைகளும்
அந்தணர் வேதியர் தங்குவதற்குமே
அலங்காரமான கூடமுண்டு
1964-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம் தனது மாதாந்திர கூட்டங்களை சோமனூர் எம்.ஏ.பி.எம். அன்ட் சன்ஸ் மில் கட்டிடத்தில் நடந்து வந்தது. நமது சங்கத்தின் ஆண்டு விழாவானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15-ம்நாள் அன்னையின் விண்ணேற்பு திருநாளன்று கருமத்தம்பட்டியில் நடத்துவது என்று முடிவு செய்து ஆண்டுவிழா கூட்டம் மற்றும் நமது குல வழக்கப்படி பூணூல் விழாவும் அன்றைய தினமே நடைபெற்று வந்தது. முன்னோர்கள் அன்றையதினம் பூணூல் அணிவிப்பதை ஒரு சடங்காக செய்து வந்தனர். நமது குலத்தவர்கள் அனைவரும் பல ஊர்களில் இருந்து தொழில் செய்து வந்தார்கள். அவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு மலர் அச்சிட்டு வெளியிட சங்க நிர்வாகிகள் முடிவு செய்து அதற்காக ஒரு கமிட்டியை தேர்வு செய்தனர். அதில் இடம் பெற்றவர்கள் மலர்குழு தலைவராக திரு. எல். மரியபிரகாசம், டெப்டி கலெக்டர் ரிடைர்டு காந்திபுரம், டாக்டர் எம். அருள்சாமி, பி.ஈ. திருப்பூர் செயலாளராகவும், மலரின் ஆசிரியர் குழுவில் பேராசிரியர் ஏ. தாமஸ், எம்.எஸ்ஸி, எம்பில் கோவை அவர்களும், வி.எஸ். குழந்தைசாமி, எம்.ஏ. எம்எட் திருப்பூர் அவர்களும், திரு. எம். குருசாமி சவுரிபாளையம் அவர்களும், திரு. எஸ். துரைசாமி, பி.ஏ. கோவை அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது இடைவிடாத முயற்சியால் அயராது பாடுபட்டு தேவாங்கர் குல மலரை 1979-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஜெபமாலை அன்னைக்கு நன்றி செலுத்தி வெளியிடப்பட்டது. இந்த தேவாங்கர் குல மலர் அச்சிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த மலர் அனைவருக்கும் கிடைத்தபின்பு தான் இந்த மலரின் முக்கியத்துவத்தை அனைவராலும் அறியமுடிந்தது. இந்த மலரின் மூலம் நமது குல மக்களின் முகவரி மற்றும் குடும்ப விவரங்கள் அறிய முடிந்தது. திருமணம் செய்ய மணமகன், மணமகள் விவரங்கள் அறிய எளிதாக இருந்தது. எனவே பெருமுயற்சி செய்து இந்த மலரினை வெளியிட்ட மலர்குழுவிற்கு நாம் என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள் நடைபெற்ற மகாசபை கூட்டத்தில் திரு. மரியசூசை செட்டியார் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்த பொறுப்பிற்கு திரு. எஸ். சிலுவை சந்தியாகு அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இவரது தலைமையில் நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டு சங்க பணிகளை செய்து வந்தனர். அப்போது பங்கு தந்தையாக இருந்த சங்கைகுரிய எம்.எம். சின்னையன் அடிகளார் நமது சங்கத்தின் நடவடிக்கைகளை பார்த்து ஆண்டுவிழா கொண்டாட்டங்களை கோவில் மண்டபத்திலும் சவுரியார் மண்டபத்திலும் நடத்த நமக்கு அனுமதி அளித்தார்கள். அப்போது ஆண்டு விழாவிற்கு வரும் அனைத்து நமது குல மக்களக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது நமது சங்கம் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்த, நன்கு படித்து அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிகமதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வந்தது. இச்சங்கம் 1982-ம் ஆண்டு நமது சமூக மக்களின் நலன் கருதி அரசாங்கத்திடமிருந்து அனைத்து சலுகைகளையும் பெற நமது இனத்தை பிற்பட்டோர் இனத்தில் சேர்க்க வேண்டுமென அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தது. பிற்பட்டோர் இனத்தில் நமது சங்கம் சேர்க்கப்படுமானால் கல்வியிலும் வாழ்க்கை தரத்திலும் நமது மக்கள் முன்னேற வழிவகுக்கும். 1982-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அம்பாசங்கர் பிற்பட்டோர் நலவாரியத்தில் நமது சமூகத்தை சேர்க்க வேண்டுமென 02.09.1983-ம் ஆண்டு நமது குலமக்கள் அனைவரும் கோவை டவுன் ஹாலிலிருந்து ஒரு ஊர்வலமாக செல்ல சவுரிபாளையம் இளைஞர் அணி முடிவு செய்து தலைமை சங்கத்திடம் தெரிவித்தது. அதன்படி 2.9.83 தேதி டவுன் ஹாலிலிருந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் வரை நமது சங்க தலைவர் திரு. எஸ். சிலுவை சந்தியாகு அவர்களின் தலைமையில் தலைவர்கள் முன்னே செல்ல, தொண்டர்கள் அணிவகுத்து சென்ற காட்சி நம்மை விட்டு இன்னும் அகலாமல் இருக்கிறது. அன்று பேனர் எழுதி ஊர்வலத்தை அருமையான முறையில் நடத்தி கொடுத்த சவுரிபாளையம் இளைஞர் அணிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இந்த ஊர்வலத்தில் சங்க தலைவர்கள், நிர்வாகிகளுடன் அந்தந்த ஊர் மணியகாரர்கள், மற்றும் ஊர் செட்டியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த ஊர்வலம் சங்கத்திற்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது எனவும் கூறுலாம். ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடைந்தபின் நமது சங்கத் தலைவர்கள், பிற்பட்டோர் நலதுறை கமிட்டி அம்பாசங்கர் அவர்களை சந்தித்து நமது அறிக்கையினை அவர்களுக்கு கொடுத்தார்கள். நமது குலத்தை பிற்பட்டோர் இனத்திற்கு கொண்டுவர அன்று நமது இந்து சகோதரர்கள் நமக்காக அம்பாசங்கரிடம் பரிந்து பேசினர். அவர்களில் திரு. வெள்ளிங்கிரி அவர்கள் முக்கியமானவர். அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றியுடன்
மார்ட்டின் ஜோசப்
பொதுச் செயலாளர்
கோவை கத்தோலிக்க தேவாங்க சங்கம்
கருமத்தம்பட்டி

No comments:

Post a Comment